பெரும்பாலான தமிழ் மீடியம் குழந்தைகளுக்கு இருந்த பயம் தான் எனக்கும் ஆங்கில பாடம் மேல இருந்தது. அதுலயும் டிக்டேஷன்னா என் கதை முடிஞ்சதுன்னு வச்சுக்கலாம். மூணாவது வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகம். அப்போதிருந்து எனக்கு அடிக்கடி தலைவலி வயித்துவலி எல்லாம் வரும், குறிப்பா மதியம் சாப்பிட வீட்டுக்கு போகிற நேரத்துல. அப்பாவும் ஆபிஸ்ல permission வாங்கிட்டு என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவாரு. காத்திருந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்கிட்டு வந்து, வீட்டுல விட்டுட்டு அப்பா மறுபடியும் ஆபீஸ் போவார். ஹோமியோபதி மாத்திரை சாப்பிட நல்லா இருக்கும், ஆனா டாக்டர் பீஸ்,மாத்திரை எல்லாம் சேர்ந்து குறைந்தது 50லிருந்து 100 ருபாய் காலி ஆகி இருக்கும். பட்ஜெட்ல வாழ்க்கை நடத்துற lower middle கிளாஸ் குடும்பம். நம்மளால இப்படி அனாவசியமா செலவாகுதேன்னு, கொஞ்ச நாள் கழிச்சு மனசு கேக்காம, அப்பாகிட்ட அழுதுகிட்டே, எனக்கு தலைவலி, வயிறு வலி எல்லாம் ஒன்னும் இல்ல. இங்கிலிஷ் பீரியட்க்கு போக பயமா இருக்குன்னு உண்மையை சொன்னேன். அப்புறம் அப்பா மனப்பாடம் செய்யாம எப்படி ஒரு வார்த்தையை எழுதுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் கொடுத்தார்(Phonics).
அதுக்கப்புறம் டிக்டேஷன்ல பூஜ்ஜியத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு மூணுன்னு முன்னேற ஆரம்பிச்சேன். 5வதுல இருந்த கிளாஸ் டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். டிக்டேஷன்ல மார்க் கம்மியானவங்க எல்லாம் திரும்ப அந்த வார்த்தையை படிச்சு சரியா எழுதிட்டுதான் லஞ்ச் சாப்பிடணும். மத்தவங்க எல்லாம் ஒன்னு ரெண்டுதான் தப்பா எழுதி இருப்பாங்க. நான் ஒண்ணு ரெண்டுதான் சரியா எழுதி இருப்பேன். அந்த 10 வார்த்தையை பசியோட படிக்கிறது எல்லாம் கொடுமையா இருக்கும். திரும்ப எழுதுறதை குரூப் லீடர்ஸ் யாரவது சரி செஞ்சு clearance கொடுப்பாங்க (அதுக்கு அந்த லீடர்ஸ் பண்ணுற அலும்பு இருக்கே) அப்புறம் தான் லஞ்ச்.
இப்படி டிக்டேஷன்கூட போராடிக்கிட்டு இருந்தப்போ என்னோட பிறந்த நாள் வந்தது. கலர் டிரஸ் போட்டுட்டு எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்துட்டு சந்தோஷமா இருந்தப்போ மறுபடியும் டிக்டேஷன், மறுபடியும் எல்லாம் தப்பு. மறுபடியும் படிக்கணும். கடுப்போட உக்கார்ந்து இருந்தப்போ அப்பா லஞ்சுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்துட்டாங்க .(வழக்கமா அம்மா லஞ்ச் கொண்டு வந்து கொடுத்துட்டு போயிடுவாங்க, அதனால இந்த அக்கப்போர் எல்லாம் வீட்டுக்கு தெரியாது) இந்த லீடர்ஸ் சும்மாவே விடமாட்டாங்க இப்போ அப்பாவுக்கு சங்கடமா ஆகிட கூடாதேன்னு யோசிச்சிகிட்டே மெல்ல ஒரு குரூப்பா உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்த லீடர்ஸ் கிட்ட போயி அப்பா வந்திருக்காங்கன்னு சொன்னேன்.
"அதெல்லாம் நீ எழுதாம சாப்பிட போக முடியாது", "டீச்சர் கிட்ட சொல்லிடுவேன்னு" ஆளாளுக்கு தீர்ப்பு சொல்லிட்டு இருந்தாங்க. அதுல ஒரு நல்ல புள்ள "நீ கிளம்பு"ன்னு ரொம்ப கூலா சொன்னா. மத்தவங்க எல்லாம் இப்போ அவ மேல பாய ஆரம்பிக்க, "டீச்சர் கிட்ட சொல்லணும்ன்னா சொல்லிக்கோ, பிறந்தநாள் அன்னைக்காவது அவ நிம்மதியா சாப்பிடட்டும் ன்னு" நாட்டாமை மாதிரி ஒரு தீர்ப்பு சொன்னா.
சின்ன விஷயமா இருந்தாலும், எனக்காக அவ பேசினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த தோழிக்கு இப்போ இது ஞாபகம் இருக்குமான்னு தெரியல, அப்போ தேங்க்ஸ் சொன்னேனான்னும் தெரியல. அதனால இப்ப மறுபடியும் ஞாபகப்படுத்தி சொல்லிக்கிறேன்.தேங்க்ஸ் முத்துலட்சுமி.
Comments
Post a Comment