இருதயராஜ் சார்

 ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் பதிவேற்றணும்ன்னு நெனச்சது, கொஞ்சம் தாமதமான பதிவுதான் But its better late than never அப்படிங்குறதால இன்னைக்கு பதிவேற்றம்.

இன்னும் ஞாபகம் இருக்கு , மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தப்போ டிவி பக்கத்துல இருக்குற ஜன்னலின் கம்பியை கையால் பிடிச்சிக்கிட்டு கண்ணில் வழிய காத்துக்கிட்டு இருந்த கண்ணீரை அடக்கி வச்சிட்டு உறுதியான குரல்ல "இல்லப்பா நான் வேற ஸ்கூல் மாறிக்கிறேன்" ன்னு அண்ணன் சொன்னது.
சிலநாட்களாகவே பிரச்சனைன்னு தெரியும் அவன் ரொம்ப மன உளைச்சல்ல இருக்கிறதும் தெரிஞ்சது.
நமக்குத்தான் படிக்கிறது கஷ்டம். பள்ளிக்கூடம் போனாலே dictation, ரேங்க் கார்டு முட்டி போடுறது இம்போசிஷன் ன்னு ஆயிரத்தெட்டு பிரச்சனை. நாமளே கம்முன்னு பள்ளிக்கூடம் போயிட்டு வரோம். நல்லா படிச்சி நமக்கு கெட்ட பேர் வாங்கிக்கொடுக்குற இவனுக்கு ஸ்கூலுக்கு போக என்ன பிரச்சனை? ஒருவேளை பதினொன்னாவது வகுப்புக்கு இங்கிலீஷ் மீடியம் மாறினதால படிக்க கஷ்டமா இருக்கோ? ன்னு நானே மனசுகுள்ள கேள்வி கேட்டுகிட்டே சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.
மதியம் அப்பா லீவு போட்டுட்டு அண்ணனின் பள்ளிக்கு கூட போனாங்க.
சாயந்திரம் நான் வீட்டுக்கு வரும்போது அண்ணனுக்கு TC வாங்கிட்டு வந்தாச்சுன்னு சொன்னாங்க.
பத்தாவதில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு. நானூத்தி ஐம்பதை தொட்டுவிடும் தூரத்தில் மொத்த மதிப்பெண்கள். இந்தக்காலத்தில் இது ஒரு சாதாரண மதிப்பெண் ஆனா கிட்டத்தட்ட இருபத்தியெட்டு வருடங்களுக்கு முன் அது நல்ல மதிப்பெண் தான்.
பள்ளி திறந்து சில வாரங்களிலேயே TC வாங்கிட்டு வர அளவுக்கு என்ன பிரச்சனை? ஒண்ணும் பெருசா இல்ல எல்லாரையும் விட ஒரு படி மேலே ஆசைப்பட்டதுதான். மருத்துவராகணும் இல்லன்னா என்ஜினீயர் ஆகணும் என்கின்ற எல்லாரையும் போன்ற ஆசைதான் ஆனா இன்ஜினியரிங் படிப்பை ஐஐடி களில் படிக்கணும்ன்னு ஆசை.
அப்போல்லாம் பள்ளிகளில் ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வகுப்புகள் நடக்கும். மாணவர்களுக்கு சாய்ஸ் எல்லாம் இல்லை எல்லாரும் வரணும். அந்த வகுப்புகள் நடக்கும் நேரமும் ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகளும் முட்டிக்கொள்ள ஸ்பெஷல் கிளாஸ்களுக்கு தாமதமாக செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போதே அந்த ஆசிரியர்களின் Bad bookல் இடம் பிடித்தாயிற்று.
அதிலிருந்து record note கள் வகுப்புக்கு வெளியே பறக்கும். விடை வந்தால் போதுமா நான் சொல்லிக்கொடுத்த ஸ்டெப்ஸ் எங்கேன்னு கணித நோட்டுகள் கிழிக்கப்பட்டது.
ஸ்பெஷல் கிளாஸ்க்கு தாமதமாக வந்ததால் வகுப்புகள் முடிந்த பின்னரும் அந்த ஆசிரியர்களின் regular வகுப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியே நிற்க வைக்கப்பட்டது.
இதோடு சேர்த்து சில வார்த்தை பிரயோகங்களும். இதை கேட்கபோனவர்களுக்கு கிடைத்த பதில் வேணும்ன்னா TC வாங்கிட்டு கிளம்புங்க என்பதுதான்.
பள்ளிகள் திறந்து சில வாரங்களை கடந்திருந்ததால் மற்ற பள்ளிகளில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்றால் அண்ணனுக்கு ஆங்கில வழியில் கற்றால் கல்லூரியில் உபயோகமாக இருக்கும் என்று ஒரு அபிப்ராயம். ஒரு வழியாக எங்கள் ஊரின் மறுகோடியில் இருக்கும் ஒரு பள்ளியில் (என்ன காரணத்துக்காக பள்ளி மாற்றம்ன்னு சொன்ன பிறகும்) இடம் கிடைத்தது.
எல்லா இடங்களிலும் ஒரு வேவு பார்க்கும் வெள்ளைச்சாமி இருப்பான். அப்படி ஒருத்தர் எங்ககிட்ட விசாரிச்சப்போ நாங்களும் வெள்ளந்தியா இந்த பள்ளிக்கூடத்தில் இடம் கிடைச்சிருக்குறதை சொல்லிட்டோம். அவரு
கரெக்டா போயி இதுக்கு முன்னாடி படிச்ச பள்ளியின் முக்கிய பொறுப்பில் இருக்குறவர்கிட்ட சொல்லி இருக்கார்.
மறுநாள் அப்பாவும் அண்ணனும் மார்க் ஷீட் TC எல்லாம் எடுத்துக்கிட்டு புதுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னாடி உக்கார்ந்து இருக்காங்க. அப்போ தலைமை ஆசிரியர் அறையில் இருந்த தொலைபேசியில் அழைப்பு.
அவர் தொலைபேசியில் "அப்படியா சார் நான் பார்த்துக்குறேன்" என்று சொன்னவாறே இணைப்பை துண்டித்து விட்டு "போன்ல யார் தெரியுமா" என்றார்.
உங்கள் முன்னாள் பள்ளியின் முக்கிய பொறுப்பில் இருக்குறவர்தான். "எங்க பள்ளியில் TC வாங்கிட்டு உங்க பள்ளியில் சேர வர்ராங்க சீட் கொடுக்காதீங்க"ன்னு சொல்லுறாரு என்ன பண்ணலாம்"ன்னு கேக்குறார்
அப்பாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்,
பள்ளிக்கு உள்ளே நடந்ததை விட இப்போ பள்ளி நிர்வாகம் நடந்துகொண்ட விதம்த்தான் அதிர்ச்சியாவும் முகம் சுளிக்க வைக்கிறதாகவும் இருந்தது. அந்த அதிர்ச்சி விலக்குறதுக்குள்ள அண்ணன் கையில் இருந்த TC மார்க் சீட் அப்பிளிகேஷன் எல்லாத்தையும் வாங்கி பார்த்துட்டு பியூனை கூப்பிட்டு ஆபீஸ் ரூமில் இந்த பைலை கொடுத்து அட்மிசன் போட சொல்லிட்டு இந்த பையனுக்கு கிளாஸ் ரூம்
காட்டிடுப்பா என்று இன்ப அதிர்ச்சியும் சேர்த்து கொடுத்திருக்கிறார்.
"பிள்ளைகளின் படிப்பை கெடுக்க இவங்களுக்கு எப்படித்தான் மனசு வருதோ சார். நீங்க worry பண்ணாதீங்க நான் பார்த்துக்குறேன்" என்று நம்பிக்கை ஊட்டி அனுப்பி வைத்தார் அந்த முன்பின் தெரியாத தலைமை ஆசிரியர்.
சக பள்ளி நிர்வாகத்தை சந்தோஷப்படுத்த எங்களுக்கு இடமில்லைன்னு சொல்லி வெளியே அனுப்பி இருக்கலாம். அதை செய்யாமல் ஒரு நல்ல ஆசிரியராக அவரின் கடமையை யார் தலையீடும் இல்லாமல் நிறைவேற்றி வைத்தார்.
பின்னாளில் இரண்டு வருடங்கள் படிப்பை முடித்து பள்ளியில் முதல் மாணவனாக எங்க அண்ணன் தேர்ச்சி அடைந்த போது "நான் பள்ளியில் இடம் கொடுத்ததால்த்தான் நீ இன்னைக்கு ஸ்கூல் first" மாதிரியான வசனங்கள் எதுவும் சொல்லாமல் மனதார வாழ்த்தி மட்டுமே அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவங்களை ஒட்டுக்கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ பின்னொரு சந்தர்ப்பத்தில் புத்தகங்களை கிழித்து வெளியே நிற்க வைத்த ஆசிரியர்களை நேரில் பார்க்கும்போது வணக்கம் சொல்லவோ மரியாதையை கொடுக்கவோ தோன்றியதில்லை.
தளவாய்சாமி சாருக்கு பிறகு நான் நன்றியோடு நினைத்து பார்க்கும் ஆசிரியர்களில் ஒருவர் என் அண்ணனின் தலைமை ஆசிரியர்.
நான் இதுவரை பார்த்திராத ஆனால் பெரும் மரியாதைக்குரிய இருதயராஜ் சாருக்கு நன்றிகள்.
எவ்வளவு பொருத்தமான பெயர்ல ?

Comments

Popular posts from this blog

அரசுப்பள்ளி

முத்துலட்சுமி