அரசுப்பள்ளி
அரசுப்பள்ளியில் சேர்ந்ததும் முதல் பிரமிப்பே காலையில் நடக்கும் பிரேயர் மீட்டிங்கில் ஆரம்பிச்சது. பள்ளியில் இருந்த அத்தனை வகுப்பு மாணவிகளும், ஆசிரியர்களும் கூடி இருந்தாங்க . எவ்வளவு பெரிய கூட்டம்னு சொல்லணும்னா, ஆறிலிருந்து பன்னிரெண்டாவது வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்புக்கும்(grade) குறைந்தது 6-10 பிரிவுகள்(sections) ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 40லிருந்து 50 பேர் (அதிகமாகூட இருந்திருக்கலாம்). இத்தனைபேரை ஒரே இடத்தில, அதுவும் வரிசைல நான் பார்த்ததே இல்ல. இவ்ளோ கூட்டத்தில தொலைஞ்சு போயிடுவோமோன்னு பயம் தான் வந்தது.
ஆபிஸ் ரூம்லபோய் எந்த section, என் கிளாஸ் எங்க இருக்கும்னு கேட்டுட்டு, ஒருவழியா என் கிளாஸ் தேடி கண்டுபிடிச்சு போனேன். (இதுல என்ன கஷ்டம்ன்னு யோசிக்கிறீங்கா? கஷ்டம்தாங்க, ஏன்னா கிளாஸ்ரூம் மரத்தடியில் . எந்த மரத்தடியில் என் கிளாஸ் இருக்குனு தேடணும்ல.)
ஏற்கனவே ஸ்கூல் ஆரம்பிச்சு ஒருவாரம் பத்துநாள் ஆனதுனால வகுப்புகள் வழக்கம் போல போயிட்டு இருந்தது. மரத்தடியில் மண் தரையில் விளையாடிப் பழக்கம்தான், அதனால முதல்ல கஷ்டமா தெரியல. கொஞ்சநேரத்துல கணுக்கால் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிச்சது. நான் நெளியுறத பார்த்துட்டு பக்கத்துல இருந்த பொண்ணு செருப்பை கணுக்காலுக்கு அடியில் வச்சுக்க சொல்லி டிப்ஸ் கொடுத்தா.புது பள்ளியில் முதல் புன்னகை முதல் சிநேகம் அது செல்வராணி. ரொம்ப அமைதியான பொண்ணு.
கிளாஸ்ல இருந்த நிறைய பிள்ளைகள் பக்கத்து ஊர்களில் இருந்து வந்து படிக்கிறவங்க . அந்த ஊர் பெயரெல்லாம் ரொம்ப புதுசா இருந்தது எனக்கு. இப்படியெல்லாம் ஊர் இருக்கா. இவ்ளோ தூரம் தள்ளி இருந்தெல்லாம் படிக்க வருவாங்களான்னு ஆச்சர்யமா இருந்தது. அந்த சின்ன வயசுலயே பொறுப்போடு குடும்ப நிலைமை புரிஞ்சி இருந்தாங்க.
சத்துணவு, பஸ்பாஸ், இலவச நோட்டு புத்தகங்கள்,சோடாபாட்டிலில் தண்ணீர், ஜோல்னா பை, ரப்பர் செருப்புன்னு(சில பிள்ளைகள் அந்த ரப்பர் செருப்பிலும் ஊக்கு (safety pin ) மாட்டி இருக்கும். ) நிஜமாகவே வேறு உலகத்துக்குள்ள வந்த மாதிரிதான் இருந்தது. எனக்கு பழக்கப்படாத உலகம், ஆனா இதுதான் யதார்த்தமான உலகம்ன்னு கொஞ்ச நாளிலேயே புரிஞ்சது.
2500 பெண்குழந்தைகளுக்கு மேல் இருந்த ஸ்கூல்ல குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள் எவ்வளவு முக்கியம். ஆனா அங்கே அது போதுமானதா இல்ல. தினமும் 3 லிட்டர் தண்ணீர் வீட்டிலிருந்து எடுத்துட்டு போவேன். அந்த அஞ்சு வருஷத்துல ஒருநாள் கூட நான் பள்ளியில் கழிப்பறை உபயோகப்படுத்தினது இல்லை. மாதவிடாய் காலங்கள் இன்னும் கொடுமை. டீச்சர்ஸ்க்கும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான்.. எங்க பள்ளியில் மட்டும் இல்ல பெரும்பாலான அரசு பள்ளிகளின் நிலைமை இதுதான்.
(இப்போ கொஞ்சம் கிளாஸ் ரூம் எல்லாம் கட்டி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். இத்தனை வருஷத்துல தண்ணீர், கழிப்பறை வசதியெல்லாம் போதுமான அளவு வந்திருச்சான்னு தெரியல.)
நெறைய நேரங்கள்ல நமக்கு எவ்ளோ privileges இருக்குதுன்னு நாம உணர்றதே இல்ல. அந்த privileges ல பாதிகூட கிடைக்காம எவ்ளோ பேர் போராடிகிட்டு இருக்காங்கன்னு பார்த்ததுக்கு அப்புறம் தான் how blessed we are ன்னு புரியும் . அது புரிஞ்சாலே நாம வாழ்க்கையை அணுகுகிற விதம் மாறிடும்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே , ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர்கள் நடந்தோ சைக்கிள் மிதிச்சோ வந்து , பள்ளிகளில் கொடுக்கப்படும் சத்துணவை நம்பி இருக்குறவங்க . தனியா டியூஷன் எல்லாம் போயி படிக்கிற வாய்ப்பு இவங்களுக்கு கம்மி. பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுக்குறத படிக்கிறதுக்கே பலருக்கு நேரம் இருக்காது. அவங்களுக்கு தகுந்தாற்போல குடும்பத்துக்கு உதவி செய்யணும்ன்னு எதாவது வேலை செய்வாங்க. இந்த சூழ்நிலையிலும் நல்லா படிச்சு முன்னேறணும்ன்னு நினைக்கிற பிள்ளைகள் அதிகம்.
ஆசிரியர்களுக்கும் பலதரப்பட்ட சமூகநிலைகளில் இருந்து வரும் பிள்ளைகள் எல்லாரையும் ஊக்கப்படுத்தி படிக்க வைக்கிறது பெரிய சவால்தான். இது மாதிரியான சவால்களைத் தாண்டித்தான் ஒவ்வொரு வருஷமும் 100% பாஸ்ங்கற பிரஷரோட பலபேரின் எதிர்காலத்துக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்க இந்தப் பள்ளிகள் முயற்சி செஞ்சு போராடிக்கிட்டு இருக்குது.
முன்னெல்லாம் எப்போ ஸ்கூல் பத்தி நெனச்சாலும், நண்பர்கள் தான் முதலில் ஞாபகம் வருவாங்க. (செல்வராணி,ரோஸி , சையது அலி பாத்திமா,அஜிதா, வரலட்சுமி, சிவஜோதி, தீபா, நஸ்கத் சுல்தானா,சரண்யா, டெய்சி,சரவணலட்சுமி,காயத்ரி, பூலம்மாள்,பத்மப்ரியா,லட்சுமிப்ரியா,# சில மஹாலட்சுமிகள் ன்னு அது ஒரு பெரிய லிஸ்ட் .)
இப்போல்லாம் கூடவே நம்ம ஸ்கூலுக்கு நாம இன்னும் எதுவுமே செய்யலியேன்னு குற்றஉணர்ச்சியும் வருது. செய்யணும்.
Comments
Post a Comment