மகா

 அப்பாவுடைய நண்பர் ஒருநாள் ஒரு ஜோசியரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தாங்க. அந்த ஜோசியர்கிட்ட என்ன விஷேசம்ன்னா அவர் அப்போதான் இமயமலை எல்லாம் போயிட்டு அங்கே இருக்குற(?) மகான்களை எல்லாம் தரிசனம் செஞ்சிட்டு வந்தவராம். அப்பாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனா அம்மாவுக்கு அதீத நம்பிக்கை. கூட்டிட்டு வந்த மாமா ரொம்ப ஆன்மீகவாதி. என்னதான் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும் அப்பா மீது அவருக்கு கொள்ளை பிரியம். அந்த உரிமைல அவரே வீட்டுக்கு ஜோசியரை கூட்டிட்டு வந்துட்டார். அப்பா சாதாரணமாவே யாரையும் கடிந்து பேசாதவர் அதனால நண்பரின் மனது புண்படக்கூடாதுன்னு ஒண்ணும் சொல்லல.

அம்மா எல்லாருடைய ஜாதகமும் எடுத்து ஜோசியர்கிட்ட கொடுத்து பார்க்க சொன்னாங்க.
அண்ணனுடைய ஜாதகத்தைப் பார்த்துட்டு ரொம்ப புண்ணிய ஜாதகம். சரஸ்வதியும் லக்ஷ்மியும் போட்டி போட்டு அள்ளிக் கொடுப்பாங்க. எண்பது வயசு வரைக்கும் நோய் நொடியில்லாம இருப்பான். வெளிநாட்டுல படிக்கிற வேலைக்குப் போகிற யோகம் இருக்குன்னு சொன்னாரு.
அடுத்து என்னுடைய ஜாதகம். உத்து உத்து பார்த்துட்டு, பதிமூணு வயசுக்கு அப்புறம் நீங்க என்ன செஞ்சாலும் படிப்பு வராது. அதனால கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிரலாம். பதிமூணு வயசுல செய்யலன்னா முப்பது வயசுக்கு அப்புறம் தான் கல்யாணம்ன்னு சொல்லிட்டாரு.
நானே அப்போதான் கொஞ்சம் குறிக்கோளோட கஷ்டப்பட்டு படிச்சு, நாலாவது அஞ்சாவது ரேங்க் எடுக்க ஆரம்பிச்சிருந்தேன். இப்படி பொசுக்குன்னு படிப்பு வராது, கல்யாணம் செஞ்சி வைங்கன்னு சொல்லிட்டாரேன்னு இருந்துச்சு.
இதுக்கேத்த மாதிரி, அப்பாவின் ஒன்றுவிட்ட அக்கா வேற கொஞ்சநாளில் அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டு வந்துட்டாங்க. அப்பா அம்மா அப்படியெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க இருந்தாலும் இமயமலை ஜோசியக்காரர் வேற படிப்பு வராது, பதிமூணு வயசுல கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரே, அவ்ளோதான் ஒருவேளை வீட்டுல சரின்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு நிமிஷம் கெதக்குன்னு இருந்தது .
ஆனா அப்பா அத்தைகிட்ட ரொம்ப தெளிவா "இல்லை"ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
பள்ளி நாட்கள்ல எனக்கு சமூக அறிவியல் பாடம் ரொம்ப பிடிக்கும். அப்போல்லாம் புத்தகத்திலிருக்குற வரலாற்று நிகழ்வுகள் வருடங்கள் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. நாடுகள் தலை நகரங்கள்,ஆறுகள் , கடல் பெயர்கள்ன்னு நானே தேடித் தேடி படிச்ச காலம். என்னை மாதிரியே ஆர்வமா இருந்த இன்னொரு தோழி மகாலட்சுமி.ரொம்ப நல்லா படிப்பா. நாங்க ரெண்டு பெரும் மாத்தி மாத்தி rapid fire மாதிரி சமூக அறிவியல் பாடத்துல கேள்வி கேட்டு விளையாடுவோம். நான் வீட்டுல இருந்து அட்லஸ் எடுத்துட்டு போவேன், நாங்க ரெண்டு பேரும் நாடுகள் பெயர்களை சொல்லி அதெல்லாம் எங்கே இருக்குதுன்னு கண்டு பிடிப்போம் . எனக்கு அப்பவே கொஞ்சம் ஞாபகமறதி இருக்கும். டீச்சர் வரைபடங்கள்(map) எல்லாம் எடுத்துட்டு வர சொல்லி இருப்பாங்க, நான் அதை பெரும்பாலும் நேரத்தோட வீட்டுல சொல்லியிருக்க மாட்டேன். ரொம்ப நேரமாகி இருந்தா கடைக்குப் போயி வாங்க முடியாது. நான் இப்படி மறந்துடுவேன்னு தெரிஞ்சே மகா (திட்டிக்கிட்டேதான் )எனக்கும் சேர்த்து மேப் எடுத்துட்டு வருவா.
எனக்கு எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்ய சுத்தமா வராது. அதனால நானா படிக்கிறதைவிட யாராவது படிச்சிட்டு எனக்கு சுருக்கமா கதை மாதிரி சொன்னா மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு நான் பரீட்சைல சமாளிச்சிக்குவேன். 8வது வகுப்பின் முழுப்பரீட்சை நெருங்கிகிட்டு இருந்த நேரம் அது. குரூப்பா எல்லாரும் சேர்ந்து படிச்சிட்டு இருந்தோம். அன்னைக்கும் எனக்கு "சதி" , "குழந்தைத்திருமணம்" , "ராஜா ராம் மோகன் ராய்" பத்தியெல்லாம் மகா கதை சொல்லிக்கிட்டு இருந்தா. அப்போ எனக்கு அந்த ஜோசியரும் அவர் சொன்னதும் ஞாபகம் வந்தது.
நான் அதை அங்கே இருந்த தோழிகள்கிட்ட சொன்னேன்.எல்லாரும் சிரிச்சிட்டும் என்னைய கிண்டல் செஞ்சிட்டும் இருந்தாங்க. ஆனா இந்த மகா மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தா அவளோட முகமே சரியில்ல . என்ன ஆச்சு ஏன் அமைதியா இருக்கன்னு கொஞ்சம் நோண்டின பிறகு ஒரு குண்டை தூக்கி போட்டா.
மகாவுக்கு கல்யாணம். அதுவும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள. சொந்தகார மாப்பிளைதான் எல்லாம் பேசி முடிச்சிட்டாங்கன்னு சொல்லுறா. குடும்ப கஷ்டம் அப்படின்னு எதுவும் இல்ல. ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான். அவ அப்பா அண்ணன்கள்னு எல்லாரும் தங்க நகை செய்யிறவங்க. அவ வீட்டுல கடைக்குட்டி வேற. அவ சொன்னதும் முதல்ல சும்மா விளையாடுறான்னுதான் நெனச்சேன். ஆனா அடுத்த வாரத்துல இருந்து அவ பள்ளிக்கூடம் வராம நின்னப்போதான் புரிஞ்சது, அவ சொன்னது உண்மைதான்னு.
அதுக்கு முன்னாடி கூட ஒரு சில பிள்ளைகளுக்கு ஏழு எட்டு படிக்கும் போதே கல்யாணம் ஆகி இருக்கு, அவங்க அப்பா அம்மா படிக்காதவங்களா இருப்பாங்க. இல்ல ரொம்ப கஷ்டத்துல இருப்பாங்க, அதனால ஒரு பிள்ளையை கல்யாணம் கட்டி கொடுத்துட்டா அடுத்து இருக்குற பிள்ளைகளை கவனிக்க முடியும்ன்னு எதாவது காரணம் இருக்கும். ஆனா மகாவுக்கு அப்படி எதுவும் காரணம் இல்ல. மாப்பிள்ளை வீட்டுல விரும்பி கேட்டாங்கன்னு அவங்க வீட்டுல இவ படிப்பைக் கெடுத்து கல்யாணம் செஞ்சி வச்சாங்க.
ஏன் என் அப்பா அத்தைகிட்ட "இல்லை" ன்னு சொன்ன மாதிரி மகா அப்பா சொல்லல?. சரி அப்பாதான் தப்பான முடிவு எடுக்குறாங்கன்னா இந்த தலைமுறை அண்ணன்கள் ஏன் தடுக்கல?. பள்ளிக்கூடம் வரலேன்னா ஏன் பள்ளி நிர்வாகம் அவங்க குடும்பத்துக்கிட்ட கேக்கல?, எல்லாத்துக்கும் மேல மகா ஏன் நான் படிக்கணும்ன்னு வீட்டுல சண்டை போடலன்னு பல கேள்விகள் மண்டைக்குள்ள ஓடுச்சு.
சின்ன வயசுல கல்யாணம் பண்ணுறதெல்லாம் ஒரிஸ்ஸாலயோ இல்ல ராஜஸ்தான்லயோ இருக்குற கிராமங்கள்ல நடக்குற விஷயமா செய்தித்தாள்கள்ல பார்த்தது. இது நம்ம ஊர்கள்ல ஒரு இருபது முப்பது வருஷத்துக்கு முன்னடியே குறைஞ்சிடுச்சுன்னு நெனச்சிட்டு இருந்தேன். எப்பவோ நடந்தது, நாம வரலாறா படிக்கிறது இப்போ கூட இருக்குற என் வயசு பிள்ளைகளுக்கே நடக்குதேன்னு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது.
என்னதான் சட்டங்கள் இருந்தாலும் எதுவும் முற்றிலுமா மாறல ஆனா கணிசமான அளவுல கொறஞ்சிருக்குது . இன்னைக்கும்கூட இங்கொண்ணு, அங்கொண்ணா நடந்துகிட்டு இருக்கலாம். தெரியல.
கள்ளிப்பால் , குழந்தை திருமணம்,உடன்கட்டை, குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் அத்துமீறல், இன்னும் பல பிரச்சனைகள்ன்னு ஒவ்வொரு தலைமுறையிலும் பல தடைகள்கூட போராடித்தான் பெண்கள் சமூகம் முன்னேறி வந்துட்டு இருக்கு. இன்னைக்கு படிப்பு, உரிமைகள், பாதுகாப்பு எல்லாம் நம்ம ஒரு சிலருக்கு கிடைச்சிட்டதால எல்லாருக்கும் கிடைச்சிடுச்சுன்னு அர்த்தம் இல்ல.
இன்னும் போராடுறவங்க போராடிக்கிட்டுதான் இருக்காங்க.
அடிக்கடி நெனைச்சுப்பேன் படிச்சு பட்டம் வாங்கி வேலைக்கு போகிற நாம எல்லாருமே அறிவாலயும் திறமையாலயும் மட்டும் முன்னேறல. அதோட சேர்ந்து கிடைச்ச பிரிவிலேஜ், சூழ்நிலைகள், வாய்ப்பு வசதிகளோடயும்தான்.
அது கிடைக்காதவங்க பாதியிலேயே படிப்பு நின்னோ இல்ல படிக்கணும்ன்னு ஆசைப்பட்டது படிக்க முடியாமலோ வாழ்க்கை இழுத்துகிட்டு போற போக்கிலே போயிடுறாங்க. ரொம்ப சிலரால் மட்டும்தான் எதிர்நீச்சலடிச்சு போராடி நெனச்ச உயரத்துக்கு வர முடியுது.
எப்பவும் ஒருத்தரை படிச்ச படிப்பு, ஆங்கில அறிவு, பார்க்குற வேலை, அவங்களோட வசதி வாய்ப்பை வச்சு எடை போட வேண்டாம். அவங்க எந்த மாதிரி சூழ்நிலைகளை சமாளிச்சு எவ்வளவு தடைகள் தாண்டி, கஷ்டப்பட்டு இன்னைக்கு இருக்குற நிலைமைக்கு வந்திருப்பாங்கன்னு நமக்கு தெரியாது. யாருக்குத் தெரியும், நமக்கு கிடைச்ச வாய்ப்புகள் அவங்களுக்கு கிடைச்சிருந்தா ஒருவேளை நம்மளை விட திறமையா வசதியா அவங்க வந்திருக்கலாம். ; இல்லையா ?!

Comments

Popular posts from this blog

அரசுப்பள்ளி

இருதயராஜ் சார்

முத்துலட்சுமி