கயல்
கொஞ்சம் சென்சிட்டிவா தோணுச்சு. அதனால கேரக்டர்களின் பெயரையும் இடங்களின் விபரங்களையும் கொஞ்சம் மாத்திட்டேன்.வாங்க கயலை பத்தி தெரிஞ்சுக்கலாம் கயலின் அனுமதியோடு.
எதோ நேத்து நடந்தமாதிரி இருக்கு ஆனா பத்து பதிமூணு வருஷம் ஆச்சு.
சேத்துப்பட்டு ரயில் வே ஸ்டேஷன், சாதாரணமாவே கொஞ்சம் அமைதியாதான் இருக்கும். அதுவும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே, வந்துட்டு போற கொஞ்சநஞ்ச கூட்டமும் குறைஞ்சிடும்.
நான் முந்நூறாவது தடவையா கைல இருந்த போன்ல எதாவது மெசேஜ் இல்ல கால் வந்திருக்கான்னு பார்த்தேன். எதுவும் வரல. நேரம் ஆக ஆக கொஞ்சம் படபடப்பும் அதிகமாயிடுச்சு. அஞ்சு மணிக்கு வர சொல்லிட்டு இன்னும் வரலைன்னு கயல் மேல கோவம் கூட வந்தது.
பேசணும்ன்னு போன் செஞ்சதுமே, போன்ல வேண்டாம்டி நேர்ல பேசலாம் நீ ஆபிஸ் முடிஞ்சு வரும்போது சேத்துபட்டுல இறங்கி வெயிட் பண்ணுடி நான் ஒரு அஞ்சு மணி போல வந்துடுறேன் என்றவளிடம் சரின்னு மட்டும்தான் சொல்ல முடிஞ்சது. இங்கே வெயிட் செஞ்சதுக்கு அவளோட ஆபீஸ்க்கே போயிருக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே படிக்கட்டுல கயல் இறங்கி வர்றது தெரிஞ்சது. நீள முகம் அதில் ஒரு ரிம்லெஸ் கண்ணாடி, ஒல்லியான தேகம் சுருட்டை முடி மாநிறம். அந்த சுடிதார்ல துப்பட்டா எப்பவும் பின் செஞ்சு இருக்கும். இன்னைக்கு அவ நடையிலே எப்பவும் தெரியிற துள்ளல் மட்டும் மிஸ்ஸிங்.
"சாரிடி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு"ன்னு பக்கத்துல வரும்போதே சொல்லிட்டு வந்தவளை திட்டக்கூட தோணல.
உனக்கு பசிக்குதான்னு கேட்டுட்டே கைப்பையிலிருந்து ஒரு சாக்லேட் எடுத்து நீட்டினாள். என் கை அனிச்சையா அந்த சாக்லேட்டை வாங்கிக்கொண்டது.
அவள் கண்களை உத்துப்பார்த்தேன். குரலில் சோர்வு தெரிந்தாலும் கண்களில் தெளிவு இருந்தது. ஏதோ முடிவெடுத்திருக்கிறாள் அதை சொல்லத்தான் இப்போ நேர்ல வர சொல்லியிருக்கிறாள்ன்னு புரிஞ்சது.
கல்லூரி நாட்கள் முதல் கயல் பழக்கம். பார்த்ததும் பெரிய அபிப்ராயம் வராதுன்னாலும் பழகினா கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கிறமாதிரி குணம்.
ரெண்டுபேரும் வேற வேற டிபார்ட்மெண்ட்ஸ்தான் கேன்டீன்ல பார்த்து ஒரு புன்னகைல ஆரம்பிச்சது கல்ச்சுரல் ப்ரோக்ராம்ல கூட வேலைபார்த்தப்போ ரொம்ப நெருங்கிய தோழிகளாகிட்டோம். என்னதான் சென்னையில் வளர்ந்திருந்தாலும் அவ பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல மதுரையின் நக்கலும் நய்யாண்டியும் தெரிஞ்சிரும் நயம் மதுரைக்காரி.
கயலின் அப்பா அவளுக்கு ஆறு வயசு இருக்கும்போதே தவறிட்டாங்க. அப்பாவின் பேங்க் வேலை அம்மாவுக்கு கிடைத்தது. ஓரிரண்டு வருடங்களில் தாத்தா பாட்டி ரெண்டு பேருமே அடுத்தடுத்து போய் சேர்ந்துவிட , அப்புறம் இவங்க ரெண்டு பேரும் தனியா மதுரைல இருக்க வேண்டாம்ன்னு மாமாவும் அத்தையும் சென்னைல அவங்க இருந்த வீடு பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து குடி வச்சிட்டாங்க..கொஞ்சம் சிபாரிசுகளுக்கு அப்புறம் அம்மாவுக்கு சென்னை கிளைக்கே மாற்றல் கிடைத்தது.
ஊரு பக்கம் பெண்ணெடுத்து, பெண் கொடுக்குறது ரொம்ப சகஜம். செண்பகம் அத்தை அப்பாவின் உடன்பிறப்புங்குறதால அத்தை கார்த்தியையும், கண்மணியையும் பார்த்துகிறமாதிரிதான் கயலையும் பார்த்துப்பாங்க.ரெண்டு குடும்பங்களுக்கும் பிரச்சனை எதுவும் வந்தது கிடையாது. கயல் முதுநிலை கடைசி வருஷம் படிக்கும்போது முதல் பிரச்சனை ஆரம்பிச்சது குடும்பத்துக்குள்.
சொந்தம் விட்டுடக்கூடாதுன்னு முதலில் அத்தை தான் ஆரம்பித்தார். கயல் பொறந்தப்பவே அவ கார்த்திக்குதான்னு முடிவு செஞ்சுட்டாங்களாம்.அதுவரைக்கும் கயல்ன்னு கூப்பிட்டு இருந்த கண்மணிகூட அண்ணின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா .கயலிடம் உனக்கு விருப்பமான்னுகூட யாரும் கேக்கல. கேட்கவும் மாட்டாங்கன்னு தெரிஞ்ச பிறகு அவள்தான் அவளுக்காக யோசிக்க வேண்டி இருந்தது.
அத்தை ஆரம்பத்திலிருந்தே அம்மாவை பேசுகிற இடத்தில வைக்கவில்லை. அம்மாவுக்கு அவர்களின் அண்ணி சொல்வதை கேட்டு மட்டும்தான் பழக்கம். "எனக்கு திடீர்ன்னு எதாவது ஆகிட்டா உனக்கு அவங்களை விட்டா யார் இருக்கா. அத்தை சொல்லுறதை கேளு "என்பது மட்டும் தான் அம்மாவின் வாயில் இருந்து வரும் மந்திரம். பெரும்பாலான சிங்கள் பேரென்ட் க்கு இருக்கும் நியாயமான பயமும்கூட நமக்கு பிறகு நம் பிள்ளைகளுக்கு யார் இருக்கா என்பது.
நாங்கள் பார்த்தவரை கார்த்திக்கும் கயலை பிடித்திருந்தது. இவளை சுற்றி சுற்றி வருவான். இவதான் முகம் கொடுத்துக்கூட அவனிடம் பேச மாட்டா. இவ்ளோ அழகா இருக்குற ஒரு முறைப்பையனை எப்படித்தான் வெடுக்குனு பேச மனசு வருதோன்னு இவளைத்தான் நாங்க திட்டுவோம்.
விளையாட்டு போல ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. இவளும் ரிசல்ட் வரட்டும், இப்போதான் வேலைல சேர்ந்திருக்கேன், டெல்லில ட்ரெயினிங் இருக்கு அது இதுன்னு சொல்லி இவ்ளோநாள் கடத்திட்டா. இப்போ கொஞ்சநாளா வீட்டுல குடைச்சல் அதிகமாகிடுச்சு.
ரெண்டுநாள் முன்னாடி கயல் அம்மாகிட்ட இருந்து போன் வந்தது. கயலை கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லும்மா. எங்க அண்ணன் அண்ணியை விட்டா எனக்கு யாரைத்தெரியும். இருக்குற ஒரு சொந்தத்தையும் பகைச்சுக்கிட்டு நான் எங்க போயி இவளுக்கு வேற மாப்பிள்ளை தேடி கல்யாணம் செஞ்சு வைப்பேன். யாரையோ நம்பி இவளை கல்யாணம் கட்டி கொடுக்குறதுக்கு எங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்பினா எனக்கும் நிம்மதியா இருக்கும்ல. நீ சொன்ன அவ கேப்பா, எனக்காக அவகிட்ட பேசுறியான்னு கெஞ்சாத குறையா பேசினாங்க.
நம்மதான் நம்மள பெத்தவங்கள தவிர யார் எது சொன்னலும் நல்ல பிள்ளையா கேப்போமே. அதான் இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சதும் நேரா அவளை பார்க்கணும்ன்னு வந்தாச்சு . நாங்க வழக்கமா போகிற ஜூஸ் கடைக்கு போயி ஒரு ஓரமா இருந்த டேபிள்ல உட்கார்ந்தோம். எப்பவும் சொல்லுற சமோசாவும் சாத்துக்குடி ஜூஸ்ம் ரெண்டு பேருக்கும் வந்தது.
ஜூஸ்க்குள்ள strawவால கோலம் போட்டுக்கிட்டே, அம்மா பேசுனாங்கடி என்றேன்.
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவளும் ஜூஸ்க்குள்ள கோலம் போட்டுக்கிட்டுதான் இருந்தா.
"என்னதாண்டி பிரச்னை, கார்த்திக்கு என்ன குறை ? பார்க்க நல்லா இருக்கான் கைநிறைய சம்பளம் வாங்குறான் சொந்த மாமா பையன் அவனை சின்ன வயசுல இருந்து தெரியும். வீட்டுல எல்லாரும் இவ்ளோ சொல்லியும் ஏன் வேண்டாம்ன்னு சொல்லுற? எனக்கு தெரிஞ்சு உனக்கு யார் மேலயும் காதலும் இல்ல. அப்படி எதாவது இருந்தாலும் வீட்டுல சொல்லலாம்ல. முடியாது வேண்டாம்ன்னு மொட்டைக்கட்டையா சொன்னா அம்மா என்னதான் செய்ய முடியும்"ன்னு தீபாவளி பட்டாசு மாதிரி பேசிகிட்டு இருந்தேன்.
நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணில் லேசாக கண்ணீர் எட்டி பார்த்திருந்தது. நீ சொல்லுறதெல்லாம் சரிதான். ஆனா எனக்கு விருப்பமில்லை. எல்லாரும் சொல்லுறாங்கன்னு என்னால ஒரு குடிகாரனை கல்யாணம் செய்ய முடியாது . என்றவள் குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
இந்தகாலத்துல எல்லாரும் குடிக்கிறது சகஜம் தானேடி. ஒரு ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறான். ஒரு மீட்டிங், பார்ட்டின்னு போகும்போதுதானே குடிக்கிறான் அதுக்காக அவன் குடிகாரனா?. சோசியல் ட்ரிங்கிங்ல என்ன தப்பு என்றேன்.
"என் அப்பா எப்படி தவறினாங்க தெரியுமா" என்றாள்.
தெரியாது என்று தலையை ஆட்டினேன்.
"இதே சோசியல் ட்ரிங்கிங் தான் அவரை குடிகாரர் ஆக்கிச்சு. எனக்கு என் அப்பாவின் வாசனையே சாராய வாசனையாதான் ஞாபகம் இருக்குது. சின்ன வயசுல அப்பா பக்கத்துல போகக்கூட எனக்குப் பிடிக்காது. அவர் குடிச்சிருக்காத நேரத்துலகூட அவர்கிட்ட எனக்கு சாராய நெடிதான் தெரியும்.
"உங்கப்பா குடிச்சிட்டு ரோட்டுல கிடந்தாராம், எங்க அப்பாதான் கொண்டுவந்து உங்க வீட்டுல விட்டாங்களாம்"ன்னு என் கூட விளையாடுற பசங்க சொல்லும்போது எனக்கு உடம்பெல்லாம் கூசும் ரொம்ப அவமானமா இருக்கும். ஏன் என் அப்பா மட்டும் இப்படி இருக்காருன்னு மனசுக்கு கஷ்டமா இருக்கும்.
ஒருநாள் குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்து ஒரு விபத்துலதான் அப்பா தவறினார். ஒரு உண்மையை சொல்லவா, எனக்கு அப்பா தவறிட்டாங்கங்கிற வருத்தத்தை விட அந்த சாராய நெடியை இனி சுவாசிக்க வேண்டாம்ன்னு வந்த சந்தோசம்தான் அதிகமா இருந்தது. இதையெல்லாம் நான் போயி வீட்டுல சொன்னா புரிஞ்சுப்பாங்கன்னு நெனைக்கிறியா?
என் அம்மாகூட புரிஞ்சுக்க மாட்டாங்க" என்றவளிடம் என்ன சொல்லறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்.
அவளே தொடர்ந்தாள், " அப்பாவுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சும் அத்தையும் மாமாவும் தான் அம்மாவை கல்யாணம் செஞ்சு வச்சாங்க. அப்பா தவறினப்போ அம்மாவுக்கு 27 வயசு. வாழ ஆரம்பிக்கும்போதே அவங்க வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. எல்லாரும் அது அம்மாவின் விதின்னு சொன்னாங்க, யாருமே அது குடியால வந்த வினைன்னு சொல்லல.
என்னோட வாழ்க்கையும் அதுமாதிரி ஆகிடக்கூடாதுன்னு நெனைக்கிறேன். என் குழந்தைகளும் என்னை மாதிரி தவிச்சிடக்கூடாதுன்னு நெனைக்கிறேன் அது தப்பா" என்றவளின் கேள்விக்கு என் தலை அனிச்சையாக அசைந்து இல்லை என்று பதில் கொடுத்தது.
"குடிக்காதவங்க எல்லாம் சாகவே மாட்டாங்களான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை. ஆனா இது தெரிஞ்சே தண்டவாளத்துல தலையை கொடுக்குறமாதிரி. குடிச்சு அவங்க உடம்பையும் கெடுத்து கூட இருக்குறவங்க நிம்மதியையும் கெடுத்துடுவாங்க. எனக்கு அப்படிப்பட்ட கல்யாணம் வேண்டாம். "ன்னு உறுதியான குரல்ல சொல்லிட்டு ஜூஸை குடிக்க ஆரம்பிச்சா.
சரிடி, கார்த்திக்கிட்ட இனிமேல் குடிக்க கூடாதுன்னு சொல்லிடு. ஒரு சத்தியம் கூட வாங்கிடு அவ்ளோதானே என்றேன் அப்பாவியாக..
அவ க்ளுக்ன்னு சிரிச்சிட்டா(நல்லவேளை ஜூஸை என் மூஞ்சியில துப்பல)
“என் அப்பா என் தலை மேல் கைவெச்சு ஒவ்வொரு தடவையும் சத்தியம் செய்வார் அது மாதிரியா?
அதான் சொன்னேனேடி இது எல்லாருக்கும் புரியாது. ஒரே மாதிரியான காயங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான வலிகளை கொடுக்குறது இல்ல. வலிகளும் வேதனைகளும் ஒவ்வொருத்தருக்கும் வேற. எனக்கும் இதே காயம்தான் ஆனா எனக்கு வலிக்கல உனக்கு ஏன் வலிக்கிதுன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்ல. ஆனா எனக்கு என் வலி பெருசு.
இதை எப்படி வீட்டுல இருக்குறவங்க மனசு நோகாம சொல்லுறதுன்னு மலைப்பா இருந்தது. நல்லவேளை நீயா வந்து இதைப்பத்தி பேசுன. நீயே இதை வீட்டுல சொல்லிடுடி”ன்னு சொல்லிட்டு திரும்ப ஜூஸை குடிக்க ஆரம்பித்தாள்.
கயல் பேசியதில் எனக்கு எதோ தெளிவு பிறந்ததைப்போல் இருந்தது. அவளை பிரமிப்புடன் பார்த்துகிட்டு இருக்கும்போதே என் செல்போன் சிணுங்கியது.
அப்பா பேசினார், "மாப்பிளை போட்டோ மெயில்ல அனுப்பியிருக்கேன்மா, வந்துடுச்சான்னு பார்த்து சொல்லு" என்றார்.
"அதிருக்கட்டும்ப்பா... மாப்பிள்ளைக்கு தண்ணி தம்முன்னு எதாவது பழக்கம் இருக்கான்னு விசாரிச்சிடுங்கப்பா. அப்புறம் முடிவு சொல்லிக்கலாம்"ன்னு சொல்லிட்டு கயலை பார்த்தேன்.
அவள் கண்கள் எனக்கு சியர்ஸ் சொல்வதுபோல இருந்தது.
Comments
Post a Comment