சிவஜோதி

 சினிமால ஒரே பாட்டுல பெரியாளாகி வாழ்க்கைல முன்னேறுறது ஜெயிச்சி காட்டுறது எல்லாம் பார்க்கும்போது நினைப்பேன் நமக்கும் வைரமுத்துவோ வாலியோ ஒரு பாட்டு எழுதிக்கொடுத்தா நல்லா இருக்குமேன்னு. ஆனா நிஜ வாழ்க்கைல இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் உழைச்சி, நாலு நல்லது கெட்டதை பார்த்து கடந்து ஒவ்வொரு நாளையும் வாழ்ந்துதான் ஆகணும். நமக்கு புடிச்ச நிகழ்வுகளை rewind செய்யவும் முடியாது, பிடிக்கலைன்னு delete செஞ்சிட்டும் போக முடியாது. நிகழ்வுகள் நினைவுகளா நம்ம மனசுல எப்பவும் இருந்துட்டே இருக்கும். ஞாபகப்படுத்தி அதை கொண்டாடுறதும் அடிமனசுல ஆழமா புதைச்சு வச்சிக்கிறதும் நிகழ்வுகளின் தாக்கத்தை பொறுத்தது.


ஆறாவது வகுப்புல காலைல சீக்கிரம் எழுந்து திருக்குறள் படிக்கிறது, செய்தித்தாள் வாசிக்கிறது, துளிர் படிக்கிறது, பள்ளிக்கூட பாடங்களை தினமும் படிக்கிறதுன்னு இருந்த ஆர்வமும் வெறியும் அப்படியே கழுதை தேஞ்சு கட்டெறும்பான மாதிரி கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சி பத்தாவது வகுப்பு படிக்கும் போது பொதுதேர்வுல 350 மார்க் வாங்குற அளவு படிச்சா போதும்ன்னு வந்து நின்னுச்சு. ஜோசியர் சொல்லிட்டு போனதோட எதிரொலியா, இல்ல commerce குரூப் தான் படிக்கப்போறேன்னு முடிவு பண்ணதாலயோ, இல்ல வயசுக்கோளாறோ எதோ ஒண்ணு.

எனக்கு பொதுவாவே கவனச்சிதறல் அதிகம். சட்டுன்னு deviate ஆகிடுவேன். அப்படி ஆகும்போதெல்லாம் திரும்ப என்னை இழுத்து பிடிச்சு பழைய ட்ராக்குக்கு கூட்டிட்டு வரணும். அப்பா படிக்கிற விஷயத்துல எங்களை திட்டினதே கிடையாது. உன்னால இன்னும் நல்லா படிக்கமுடியும் முயற்சி செய், நான் உதவி பண்ணுறேன்னு சொல்லுவாங்க. அண்ணன் கொஞ்சம் உசுப்பேத்தி, கடுப்பாக்கி சவால் விட்டு என்னைய படிக்க வைப்பான்.

ஆனா அமைதியா எதுவுமே பேசாம என் கண்ணை உத்து பார்த்தே என்னை புத்தகம் எடுக்க வைக்கிறது சிவா மட்டும்தான்.கழுத்தில் கருப்பு/சிவப்பு கயிறு அதில் ஒரு சாமி டாலர், நெத்தியில சிவப்பு பொட்டு கூடவே பெரிய திருநீறுக்கீற்று, மடித்து பின்னியிருக்கும் இரட்டை ஜடை, பச்சைநிற பாவாடை தாவணி , இதுதான் சிவஜோதி.

விளையாடுற நேரம் விளையாட்டு இருக்கும், ஆனா படிக்கணும்ன்னு உட்கார்ந்த பிறகு அரட்டை அடிச்சிட்டு இருந்தேன்னா அவ முறைக்கிறதுலயே தெரிஞ்சிடும் இப்போ படிக்கலைன்னா அடுத்து திட்டு விழப்போகுதுன்னு. அவள் முறைக்கும் போது அவளின் குட்டிக் கண்கள் இன்னமும் சுருங்கி, தலை ஒருபக்கம் சாய்ஞ்சிருக்கும் அதுலயே எனக்கு தெரிஞ்சிடும் பயபுள்ள கடுப்பாகிடுச்சுன்னு.

எப்பவாவது அரட்டைகள் அதிகமாகிடுச்சுன்னா, தனியா கூட்டிட்டு போயி "இதுக்கா தினமும் எட்டு கிலோமீட்டர் சைக்கிள் அழுத்திட்டு வர்ற? மரத்தடியில, வெயில்ல, மழைலன்னு கஷ்டப்பட்டது இப்படி கதை பேசி உருப்படாம போறதுக்கா? கண்ணு புஸ்தகத்த தவிர எங்கயாவது பார்க்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு"ன்னு தலைல தட்டி படிக்க வச்சா.

"commerce குரூப் எடுக்க இவ்ளோ படிச்சா பத்தாதா"ன்னு நான் கேட்டா,

பதிலுக்கு "ஏன் நானூறுக்கு மேலே மார்க் வாங்கினா commerce குரூப் தர மாட்டேன்னு சொன்னாங்களா? நல்லா படிச்சி மார்க் வாங்கிட்டு கூட commerce குரூப் எடுக்கலாம் ஒழுங்கா படி"ன்னு சொல்லுவா.

டீச்சர் பரீட்சை பேப்பர் திருத்தி கொடுக்கும்போதும் ரேங்க் கார்டு கொடுக்கும்போதும் அப்பா அம்மாவுக்கோ இல்ல டீச்சருக்கோ நான் பயந்தது கிடையாது. ஆனா இவளுக்கு பயப்படுவேன். பேப்பர கையில வாங்கி டோட்டல் சரி பார்த்ததும் அடுத்து ஒரு விசாரணை கமிஷன் வச்சிடுவா, இந்தக்கேள்விக்கு ஏன் பதில் எழுதல, அந்த கணக்கு ஏன் தப்பா போச்சுன்னு.

நம்மள போட்டியா நினைக்காம, அவங்களோட சேர்த்து நம்மளையும் உயர்த்தணும்ன்னு நினைக்கிற நண்பர்கள் கிடைக்கிறதே பெரிய வரம்தான். அதிலும் அவங்களை ஏணியாக்கி நம்மளை உயரத்துக்கு போக வச்சிட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நம்ம வளர்றதை பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுற/பெருமைப்படுற நண்பர்கள் பொக்கிஷங்கள்.

பத்தாவது தேர்வு முடிவுகள் வந்தது, நான் பதினொண்ணாவதுக்கு வேற ஸ்கூல் போறேன்னு சொன்னதும் அவ கண்ணு வேர்த்துடுச்சு. என் வீட்டு முகவரியை அவசரமா ஒரு பேப்பர்ல எழுத்திக்கொடுத்துட்டு, அவளோட முகவரியையும் வாங்கிட்டேன். என்னமோ தோணிச்சு உரிமையோட அவளோட ஹால் டிக்கெட்ல ஒட்டியிருந்த அவளோட போட்டோவையும் ஞாபகார்த்தமா பிச்சி எடுத்துட்டு வந்துட்டேன். அதுதான் அவளை நான் கடைசியா பார்த்தது.

சிவஜோதி, நான் ஸ்கூல்ல தொலைச்சிட்டு இன்னமும் தேடிக்கிட்டு இருக்குற ஒரு பொக்கிஷம்.

எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் யார்கிட்ட பேசினாலும் முதல்ல விசாரிக்கிறது அவளைப்பத்தி யாருக்காவது தகவல் தெரியுமான்னுதான். இதுவரைக்கும் யாருக்கும் தெரியல ஆனா கண்டிப்பா ஒருநாள் அவளை பார்ப்பேன்னு நம்பிக்கை இருக்கு.

Comments

Post a Comment

Popular posts from this blog

அரசுப்பள்ளி

இருதயராஜ் சார்

முத்துலட்சுமி