சைக்கிள்
சில விஷயங்கள் நமக்கு கத்துக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா/பயமா இருக்குன்னா ஒண்ணு நமக்கு அதில் ஈடுபாடு இல்லாம இருக்கணும் இல்லை அதை கத்துக்க வேண்டிய அவசியம்/கட்டாயம் இல்லாம இருக்கணும்.
எனக்கு சைக்கிள் கத்துக்கிறது அப்படித்தான் இருந்தது. ஐந்தாவது வரைக்கும் வீட்டுல எவ்ளோ சொல்லிக்கொடுக்க முயற்சி செஞ்சும் கீழே விழுந்துடுவோம்ன்னு பயந்துகிட்டு கத்துக்காம இருந்தேன்.எங்கே போனாலும் அப்பாவோ அண்ணனோ கூட்டிட்டு போறதால கத்துக்க வேண்டிய அவசியமும் இல்லாம இருந்தது.
ஆறாவது படிக்கிறப்போ தினமும் அண்ணன் கூட சைக்கிள்ல போவேன். அவன் ஸ்கூலுக்கு போகும்போது என்னையும் கொண்டுபோய் விட்டுட்டு போவான். நாங்க ஸ்கூலுக்கு போற வழியில ஒரு மேடு வரும். அந்த மேட்டுல முக்கால்வாசி தூரம் போனதும் பெரும்பாலும் எல்லாரும் இறங்கி சைக்கிளை உருட்டிக்கிட்டுதான் போவாங்க. ஆனா நான் சைக்கிள்ல இருந்து இறங்க மாட்டேன்னு அடம்பிடிப்பேன்(கீதகோவிந்தம் படத்துல ரஷ்மிகா உர்ர்ன்னு வண்டியில உக்காந்துகிட்டு வருமே அதுமாதிரி).பாவம் என்னையும் டபுள்ஸ் வச்சிட்டு அந்த மேட்டுல சைக்கிள் அழுத்திட்டு/உருட்டிட்டு போவான். எலியும் பூனையுமா இருக்குற எங்களுக்குள்ள எப்போல்லாம் சான்ஸ் கிடைக்குதோ அப்போல்லாம் இந்த மாதிரி பழிவாங்கிடுவேன்.
நான் எவ்ளோ கொடுமைப்படுத்தினாலும், ஸ்கூலுக்கு கொண்டு போய் விடமாட்டேன்னு சொல்லமுடியாது. ஏன்னா அடுத்த வார்த்தை உன்னாலதான நான் இவ்ளோ தூரம் வந்து படிக்கிறேன்னு கண்ணை கசக்கிடுவேன். (முன்ன படிச்ச பள்ளியோட பஞ்சாயத்து அண்ணன்கிட்ட தான்).
சாயந்திரம் அண்ணனுக்கு (12th) டியூஷன் எல்லாம் இருக்கும் அதனால புத்தகப்பையையும் சாப்பாட்டு கூடையும் தூக்கிட்டு மாங்கு மாங்குன்னு வீட்டுக்கு நடந்து வருவேன். அப்போ எல்லாரும் சைக்கிள்ல போகுறத பார்த்து ஆசையா /பொறாமையா இருக்கும். ஆனா சைக்கிள் ஓட்ட மட்டும் தைரியம் வராது. அந்த வருஷம் முழுப்பரீட்சை லீவுல தாத்தாவின் ஊருக்கு போனப்போ அங்கே நண்டு நடுவானுங்க எல்லாம் சைக்கிள் ஓட்டிட்டு இருந்துச்சுங்க. என் வயசு பிள்ளைங்கெல்லாம் டிவிஎஸ்50, xl ன்னு ஓட்டிட்டு இருந்தாங்க. எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுன்னு சொல்லுறதுக்கே ரொம்ப கேவலமா போச்சு.
அங்கே என் மாமா பொண்ணுதான் அவ சைக்கிளை கொடுத்து ஒட்டுறதுக்கும் கத்துக்கொடுத்தா. சைக்கிள் பின்னாடியே ஓடி வருவா. நான் எங்கேயாவது கீழே விழுந்து அடிபட்டுச்சுன்னா அவளுக்குத்தான் வீட்டுல பூஜை விழும், இருந்தாலும் அக்கறையா விடாம சொல்லிக்கொடுத்து ஓட்ட வச்சது அவதான்.
அம்மா ஒரு 10 நாள் கழிச்சு கூப்பிட வரும்போது பஸ்ஸ்டாப்க்கு சைக்கிள்ல போயி surprise கொடுத்தேன். இப்போ கிராமத்துல இருக்குற ரோட்ல ஓட்டியாச்சு,ஆனா ஸ்கூலுக்கு போகுற வழி பஸ் காரெல்லாம் வருமே, ரோடு வேற கிராஸ் பண்ணனும் அதுக்கு பயம் இப்போ.
அடுத்த வருஷம் அண்ணனும் மருத்துவம் படிக்கணும்ன்ற ஆசைல improvement எழுதறதுக்காக வீட்டுலதான் இருந்தான். அதனால இப்போ காலைலயும் சாயந்திரமும் அண்ணனின் பொறுப்பு. ஒருநாள் அண்ணனுக்கும் எனக்கும் பெரிய சண்டை அதனால கொண்டுபோயி விடமாட்டேன்னு சொல்லிட்டான். உள்ளே அம்மா அவனை சமாதானப்படுத்த முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. எனக்கு வந்த கோவத்துலயும் ரோஷத்துலயும் என்னோட சைக்கிள் எடுத்துட்டு நானே கிளம்பிட்டேன். சின்ன வயசுல இருந்தே எது வருதோ இல்லையோ எனக்கு கோவம் மட்டும் மூக்குக்கு மேல வரும். யாரையும் கெஞ்சப் பிடிக்காது.
அதுவரைக்கும் மெயின் ரோட்ல ஓட்டினது கிடையாது, சைக்கிள்ல உட்கார்ந்துக்கிட்டே "U" டர்ன் பண்ண தெரியாது. ஒரு குருட்டு தைரியத்துல கிளம்பியாச்சு. மண்ணு ரோட்டுலயே மெல்ல மெல்ல ஓட்ட ஆரம்பிச்சேன். பஸ் லாரி ஏதாவது வந்தா ஒரு ஓரமா நின்னுடுவேன்.என் நேரத்துக்கு எதாவது ஒரு வண்டி வந்துகிட்டே வேற இருக்கும். அது போனதுக்கு அப்புறம்தான் போவேன்.
அந்த மேட்டுக்கு வரும்போதுதான் தெரிஞ்சது அங்கே சைக்கிள் ஓட்டும்போது எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு. ஒரு வழியா அன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு கொஞ்சம் தைரியம் வந்தது. உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருந்தாலும் இனிமேல் நானே போய்க்கிறேன்னு கெத்தா சொல்லிட்டேன். தேவை வந்தப்போ தைரியமும் கொஞ்சம் கொஞ்சமா வந்தது.
கொஞ்சநாள் கழிச்சுத்தான் அம்மா சொன்னாங்க, நான் கோவிச்சிட்டு வீராப்புல போனாலும், கொஞ்ச நாள் அண்ணன் பின்னாடியே வந்து பத்திரமா போறேனான்னு பார்த்துட்டுதான் வருவான்னு.
சைக்கிள் கத்துக்கிட்ட கையோட (/காலோட) கொஞ்ச நாள்லயே டிவிஎஸ்50 ஓட்டுறதுக்கு அப்பாவும் அண்ணனும் கத்துக்குடுத்தாங்க. வண்டி ஓட்ட கத்துக்கிட்டா யாரையும் எதிர்பார்க்காம நம்மால நாலு இடத்துக்கு போயிட்டு வர முடியும். அதுவே கொஞ்சம் தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நான் அமெரிக்கா வந்ததும் ஒரு மாசத்துல ஊட்டுக்காரர் காரோட்ட கத்துக்கொடுத்தார். கத்துக்கும் போது கடுப்பா இருந்தது. இந்தியா லைசென்ஸ் வச்சு உடனே ஓட்ட ஆரம்பிச்சுட்டாலும் அமெரிக்கன் லைசென்ஸ் வாங்கத்தான் ஒரு வருஷம் ஆச்சு
லைசென்ஸ் வாங்கின பிறகுதான் நியூயார்க் ட்ரிப்ன்னு(motivation
) சொன்னதும் உடனே அடிச்சி பிடிச்சி வாங்கினேன்(ஊட்டுக்காரை இல்ல லைசென்ஸ்ஸ
).
இப்போ நான் independentஆ நாலு இடத்துக்கு போயிட்டு வர முடியுது. அதுக்குக் காரணம் எனக்கு பொறுமையா கத்துக்கொடுத்தவங்கத்தான் . அவசியம்ன்னு வரும்போது எல்லாராலயும் கத்துக்க முடியும். கத்துக்கிற காலமும் விதமும்தான் வேறுபாடும்.
"கற்றல் எவ்ளோ அவசியமோ அதே அளவு பொறுமையோடு கற்பித்தலும் அவசியம்."
நன்றிகள் பல. கற்பித்தவர்களின் பொறுமைக்கும் அன்புக்கும். 
Comments
Post a Comment