First Rejection
ஒரு சில காரணங்களால் 6 வது வகுப்பிலிருந்து வேறு பள்ளிக்கு மாற வேண்டிய சூழ்நிலை.
நான் படிச்ச பள்ளி குழுமத்தின் உயர்நிலைப் பள்ளியில் சேரணும்ன்னா நுழைவுத்தேர்வு உண்டு. அதுல பாஸ் ஆனா மட்டும்தான் 6வதில் சேர முடியும். இல்லைன்னா வேறு பள்ளிகளுக்குத்தான் மாறணும் .
நான் 5வது படிக்கும்போது எங்க குடும்பத்துக்கும் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கும் ஒரு பிரச்சனை (காரணம் பொதுவெளியில் சொல்லலாமான்னு ஒரு சின்ன குழப்பம். யோசிச்சுட்டு இருக்கேன். ) . அதனால "கண்டிப்பா இடம் கொடுக்க மாட்டாங்க, நானும் போயி யார்கிட்டேயும் இடம் கொடுக்க சொல்லி கேட்க மாட்டேன்னு" அப்பா தெளிவா சொல்லிட்டாங்க.
அம்மாவுக்கு, பெண்பிள்ளை கண்ணெத்துக்க வீட்டுக்கு பக்கத்துலயே(ஒரு 1/2 km-1km தான் தூரம்) ஸ்கூல்ல படிச்சா நல்லா இருக்குமேன்னு ஒரு நப்பாசை.
அம்மாவும் நானும், நிர்வாகத்துல அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க, நாம எக்ஸாம் எழுதுவோம், மார்க் வாங்கினா எப்படி கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்கன்னு அடம் புடிச்சு application போட்டோம். (application கொடுத்தபோதே ரெட் மார்க் செஞ்சு ஓரமா வச்சிட்டாங்க. )
சொன்னா நம்ப மாட்டிங்க, வெறி கொண்டு படிச்சேன் இந்த எக்ஸாம்க்கு. மாடல் டெஸ்ட்ல வாங்கின மார்க் பார்த்து எங்க டீச்சரே ஆச்சர்யப்பட்டாங்க. எக்ஸாமும் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்தது. எதிர்பார்த்தது போல என் பேர் லிஸ்ட்ல இல்ல. ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது. நான் வாங்கின மார்க் அதுல போட்டுட்டு, உங்க கூட இருக்குற பிரச்சனையால இடம் கொடுக்க முடியாதுன்னு சொல்லி இருந்தாகூட எனக்கு மனசு ஆறியிருக்கும். ஆனா என் பேரே வரலைன்னா நான் fail ஆகிட்டேன்னு தானே அர்த்தம். நீங்க பழி வாங்குறதுக்கு இதுதான் கிடைச்சுதான்னு ரொம்ப கோவமா இருந்தது.
முதல் rejection, எப்படி எடுத்துக்கணும்ன்னு தெரியல. ஆனா நம்மளை reject பண்ணவங்க முன்னாடி நல்லா படிச்சு வரணும்ன்னு மட்டும் தோணிச்சு. ஒரு மாசம் ஒழுங்கா படிச்சாலே மாடல் டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்க முடிஞ்சது, அதுமாதிரியே வருஷம் முழுக்க படிக்கணும்ன்னு ஒரு வைராக்யம்.
அப்பா இதை எதிர்பார்த்துதான் இருந்தாங்க, அதனால வேற பள்ளிகள்ல சேர்க்க application வாங்குற வேலைல இருந்தாங்க. ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல பேசிட்டும் வந்தாச்சு.
இங்கிலிஷ்மேல இருக்குற பயம் போகணும்னா இங்கிலிஷ் மீடியம்ல படி, ஒரு வருஷம் fail ஆனாலும் பரவாயில்லைன்னு எவ்ளோ சொல்லியும் நான் கேக்கலை. (கேட்டிருக்கணும்) நாட்கள் கடந்துட்டதால வேற பள்ளிகள்ல இடம் கிடைப்பதிலும் சிக்கலாச்சு. கடைசில மற்ற தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் சேரலாம்னு முடிவெடுத்தோம். ("படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும்ன்னு" பன்ச் வேற. ). அப்பாவுக்கு தெரிந்த நண்பரின் மனைவி அங்கே வேலை பார்த்ததால், அம்மாவும் அப்பாவும் தைரியமா 4km தள்ளி இருந்த அரசு பள்ளியில் சேர்த்துவிட்டாங்க.
இதுவரை தனியார் பள்ளி, கருநீலநிற பாவாடை , வெள்ளை சட்டை சீருடை , சாக்ஸ் , ஷூ , பாய் மாமா கடையின் லேட்டஸ்ட் மாடல் புத்தகப்பை. லஞ்சுக்கு வீட்டுக்கு வரலாம் இல்லைன்னா லஞ்ச்சே ஸ்கூலுக்கு சூடா வரும். அப்பா காலையில் வண்டியில் கொண்டுவந்து விட்டுவிட்டு , சாயந்திரமும் பெரும்பாலும் கூப்பிட வருவாங்க. இல்லைனாலும் மெயின் ரோட்லயே நடக்குற தூரம்தான்.
இனிமேல் அரசுப்பள்ளி மாணவி. பச்சை பாவாடை, வெள்ளை சட்டை சீருடை, செருப்பு. மரத்தடி வகுப்புகள், சைக்கிள் ஓட்டத் தெரியாது, (பஸ்ல வரணும்ன்னா ஸ்கூல்ல இருந்து பஸ்ஸ்டாண்டுக்கே ஒன்றரை கிலோமீட்டர் நடக்கணும். திரும்ப பஸ்ஸ்டாப்ல இறங்கி வீட்டுக்கு நடக்கணும். எல்லாத்துக்கும் மேல பஸ் கூட்டமும் அல்ர்ஜி, பஸ்ல ஏறியதும் வாந்தி எடுக்கும் பழக்கம் வேற.) அதனால தினமும் 8km நடராஜா சேவைதான். சாப்பாடு, தண்ணி எல்லாம் இனி சுமக்கணும்
திடீர்ன்னு வேற உலகத்துக்குள்ள போனது மாதிரி இருந்தது. ஆனா, ஸ்கூல் போக ஆரம்பிச்சதும்தான், நிறைய விஷயங்கள் புரிஞ்சது. எவ்ளோ pampered environment ல இருந்திருக்கோம்னு தெரிஞ்சது , .
எளிமையான ஆசிரியர்கள், வெள்ளந்தியான நண்பர்கள் , அரசு பள்ளி மேலே அதுவரை இருந்த அபிப்ராயத்தை மாற்றிய நிகழ்வுகள்ன்னு, வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவிய வருடங்கள் அது.
அப்போ தோணிச்சு, reject செஞ்சவங்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லணும்னு.
ஒருவேளை படிக்க இடம் கொடுத்திருந்தாலும் அவங்களுக்கு என் மேல் ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்துகிட்டே இருந்திருக்கும் . அது கண்டிப்பா என்னை இன்னும் அதிகமா பாதிச்சிருக்கும். எல்லாம் நன்மைக்கே 
Comments
Post a Comment