கயல் 3.0
கைபேசியின் "டிங்" சத்தமும் "பளிச்" ஒளியும் அசந்து தூங்கின என்னை மத்த நாட்களில் எழுப்பியிருப்பது சந்தேகம் தான், அன்னைக்கு "டிங்" சத்தம் அடங்குறதுக்குள்ள போன் unlock ஆகி இருந்தது...
ஒருவித பதட்டத்தோட ஒரு நொடி கைபேசியின் ஓரத்தில் மணி பார்த்துகிட்டே குறுஞ்செய்தியை திறந்து பார்த்ததும் ஒரு சிறு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டது.
"உசிரோடதான் இருக்கேன், will call tomorrow
" ன்னு தங்கிலீஷ்ல அனுப்பியிருந்தாள்....
ஓகே குட் நைட் என்று பதில் அனுப்பிட்டு கண்ணை மூடினா அவ்வளவு தூக்கமும் போயி அங்க என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சிகிட்டே விடிய விடிய முழிச்சிருந்தேன்.
மறுநாள் சனிக்கிழமை கயல் ஒரு பத்து மணி வாக்குல போன் செஞ்சா. வழக்கமான ஹாய் ஹலோ வுக்கு பிறகு, என்னடி ஆச்சு என்ற என் கேள்விக்கு "ம்ம்ம்ம் இன்னைக்கு மத்தியானம் நீ free யா" என்றாள்.
நானும் "ஒரு நாலஞ்சு appointments இருக்கு உனக்காக கேன்சல் செஞ்சிடுறேன்" என்றேன்.
"சரி 3 மணி போல ஹாஸ்டல் வரேன்" என்றாள் என்னுடைய நகைச்சுவையை(!) கண்டுகொள்ளாமல்.
இன்னும் ஐந்து மணி நேரம் இருந்தது. கடிகாரத்தில் ஒரு கண் வைத்துக்கொண்டே என் சனிக்கிழமை வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன் .
மூணு மணியானதும் இருப்பு கொள்ளல. கயல் கிட்ட இருந்து மறுபடியும் போன்.வந்துட்டேன் நீ கீழ வா என்றாள்.
விசிட்டர் ரெஜிஸ்ட்டர்ல கையெழுத்து போட்டுட்டு ரெண்டு பெரும் மேலே என் அறைக்கு வந்தோம்.
எனக்கு ஆர்வம் தாங்கல "என்ன ஆச்சு" என்றேன்.
"என்ன ஆச்சு, ஒண்ணும் ஆகல... எல்லாம் மீசைக்காரர் பார்த்துக்கிட்டார்" என்றாள்.
"மீசைக்காரர்" கயலோட மாமாவின் செல்ல பெயர்.
அவர் பேசியே நான் அதிகம் பார்த்ததில்லை. அவர் நேத்து கயலுக்காக பேசினார்ன்னு அவ சொன்னப்போ ரொம்ப ஆச்சர்யமா இருந்தது.
"விருப்பமில்லைன்னு சொன்ன பிறகு கட்டாயப்படுத்த கூடாது. அவ எங்க இருந்தாலும் நம்ம வீட்டு பிள்ளைதான். வாழப்போறது அவ, அவளோட விருப்பம் முக்கியம் etc"ன்னு முத்துமுத்தா அவர் சொன்ன தோரணைலயே இவ பேசி காட்டினப்போ மாமாவின் மனஓட்டம் என்னவா இருந்திருக்கும்ன்னு நல்லா புரிஞ்சது.
தங்கச்சியோட வாழ்க்கை இப்படியானதுக்கு தானும் ஒரு காரணம்ன்னு ஒரு உறுத்தல் கண்டிப்பா அவருக்குள்ள இருந்திருக்கு. அந்த குற்ற உணர்ச்சிதான் அவரை கொஞ்சம் இறுக்கமானவரா வச்சிருந்தது. அவர் அதிகம் பேசிக் கூட யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.
பெரும்பாலான ஆண்கள் அவ்வளவு எளிதாக நான் தப்பு செஞ்சிட்டேன்னு ஒத்துகிறதோ இல்ல அதுக்கான மன்னிப்பு கேக்குறதோ ரொம்ப கஷ்டம். ஆனா ஒரு சிலர் வெளிப்படையா சொல்லலைனாலும் அந்த தப்புக்கான பிராயச்சித்தங்களை சரியான நேரத்தில் செஞ்சிடுவாங்க. இவங்களை சென்னைக்கு அழைத்து வந்து குடி வைத்தது, கயலின் அம்மாவுக்கு வேலை மாற்றலுக்கு அலைந்தது எல்லாமே பாசம் மட்டுமில்ல, பிராயச்சித்தமும் கூடத்தான். அதன் தொடர்ச்சிதான் நேத்து அவர் பேசினதும்ன்னு தோணிச்சு.
எப்பவும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசாதவர். அவர் நேத்து பேசினதை யாரும் தடுக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அது அத்தனை நாட்கள் அவர் காத்த மௌனங்களின் விலை.
அத்தைக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் சில காலத்தில் அதுவும் மறைந்து போனது. என்ன இருந்தாலும் வளர்த்த மனசு இல்லையா வருத்தம் இருந்தாலும் வெறுக்க முடியாது. என்னதான் அம்மா கூடவே இருந்தாலும், அத்தைகளாலும் சித்திகளாலும் அரவணைத்து வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் புரியும் அந்த அற்புதமான உறவு. அந்த உறவும் உரிமையும் தான் கயலை
வெளிப்படையாய் பேசினால் அவர்களை காயப்படுத்திடுவோமோ என்று முதலில் தயங்க வைத்தது.
எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும். நாம எதாவது தப்பு செஞ்சு சறுக்கி விழ மாட்டோமான்னு காத்துகிட்டு இருக்குற சுற்றங்களையே அதிகம் பார்த்திருந்த எனக்கு செண்பகம் அத்தையும் மீசைக்காரரும் உன்னதமானவர்களா தெரிஞ்சாங்க.
கயலின் எதிர்காலத்தை நினைத்து அம்மாவின் பயம் இப்போ கொஞ்சம் அதிகமானது, அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறமாதிரி சில பல மாசங்கள் கழிச்சு எல்லாருக்கும் பிடிக்கிறமாதிரி ஒரு வரன் அமைஞ்சது.
கயலின் கல்யாணம் அவளின் முழு விருப்பத்துடன் நடந்தது. மொத்த குடும்பமும் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செஞ்சாங்க. மாமாவின் முகத்தில் ஒரு தெளிவும் சந்தோஷமும் இருந்தது. எங்களுக்கு மீசைக்காரர் பாசக்காராராய் தெரிந்தார். கயல் கண்களுக்கு தாய்மாமன் அன்று தந்தையுமானவனாய் தெரிந்தார்.
இன்று கயல், கண்மணி, கார்த்தி எல்லோருமே அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
இதுமாதிரி, புரிதல்களோட, விட்டுக்கொடுத்து, தட்டிக்கொடுத்து, பாசமா, என்ன நடந்தாலும் கூடவே இருக்குற சொந்தங்கள் கிடைச்சிட்டா வாழும் வாழ்க்கை சொர்க்கம் தானே!
சுபம்.
Comments
Post a Comment